நீங்கள் கட்டாயம் பின் தொடர வேண்டிய பிஞ்சுக் குழந்தைகளுக்கான அத்யாவசிய உணவு வகைகளின் பட்டியல்

Image: Shutterstock

IN THIS ARTICLE

பிறந்த குழந்தைகளுக்கு என்ன வகை உணவுகள் தர வேண்டும், எப்போதில் இருந்து அவர்களுக்கு திட உணவு கொடுக்கலாம் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அம்மாக்களின் மனதில் குடி கொண்டிருக்கும். உங்களுடைய குழந்தை ஆரோக்கியமான உணவை உண்ண சில அவசியமான உணவுகளை நீங்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இந்தியக் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான சில முக்கிய உணவுகள் பற்றிய பட்டியலை இங்கே நான் கொடுத்திருக்கிறேன். இது பெரும்பாலும் என் சொந்த அனுபவங்கள் மூலம் கண்டறியப்பட்ட உணவுகள் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பெரும்பாலான வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் சில க்ளினிக்குகள் கொடுத்த உணவு விளக்கப்படங்களைத் (chart ) தொகுத்து இங்கே வழங்குகிறேன்.

இது குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கும் பொருந்தக் கூடிய சார்ட் என்றாலும்  இப்படியான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே உணவுகளைக் கொடுப்பது நன்மை தரும்.

குழந்தைகளுக்கு எப்போதில் இருந்து திட உணவு கொடுக்கலாம்

எப்போதுமே குழந்தைகளின் உடல் உறுப்புகள் வளர்ச்சியானது சற்று மெதுவாகத்தான் நடைபெறும். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் போன்ற நீர்த்தன்மையான உணவுகள் தான் தர வேண்டும். திட உணவைக் குழந்தைகள் உடல் செரிக்க ஆரம்பிப்பது 6 மாத வளர்ச்சிக்குப் பின்னர்தான்.

உணவால்தான் இந்த உடல் வளரப்போகிறது என்பதைக் கொண்டாடும் விதமாகவே இந்தக் கலாச்சாரத்தில் குழந்தைக்குத் திட உணவு தருவதை ஒரு சடங்காகவே செய்கிறார்கள். அவரவர் தெய்வ நம்பிக்கைப்படி ஏதாவது ஒரு ப்ரார்த்தனைத் தலத்தில் வைத்து குழந்தைக்கு திட உணவு ஊட்டப்படுகிறது.

இது தாண்டி மருத்துவ ரீதியான உண்மைகளையும் பார்க்கலாம். அமெரிக்க குழந்தைநல மருத்துவ அகாடமி (AAP) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் UNICEF நிறுவனம் இவர்கள் மூவருமே குழந்தைக்கு முதல் ஆறுமாத காலங்கள் தாய்ப்பாலே சிறந்த உணவு என்று கூறுகின்றனர் (1) .

இதில் AAP நிறுவனம் குழந்தைகளுக்கு நான்கில் இருந்து ஆறு மாத இடைவெளிக்குள் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறது. அதற்கு முன்னர் குழந்தைக்குத் திட உணவு கொடுக்கக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

குழந்தைக்கு ஆறு மாதமோ, ஏழு மாதமோ அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களோ எந்த மாதமாக இருந்தாலும் திட உணவை ஒரேயடியாகக் கொடுத்து விடக் கூடாது.

வழக்கமான பால் உணவிற்கு மத்தியில் சிறிதளவு திட உணவு கொடுத்துப் பழக்கப்படுத்த வேண்டும் (2). சிறிது சிறிதாகவே திட உணவின் அளவை நாம் அதிகரிக்க வேண்டும். அதிக முறை தாய்ப்பால் அல்லது பார்முலா உணவுகளைக் கொடுக்கலாம். முதலில் உங்கள் குழந்தையின் சுவை என்ன அதற்கு எந்த சுவை அதிகம் பிடிக்கிறது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமானதாகும்.

6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கான உணவுப்பட்டியல்

உங்கள் குழந்தைக்கு நீங்கள் திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது இரண்டு வகையான காம்பினேஷனில் கொடுக்கலாம்.

பழம் மற்றும் பருப்பு ,அரிசி வகைகளை இணைத்து ஒரு உணவுப்பட்டியலைத் தயார் செய்து கொடுப்பது சிறந்ததாக இருக்கும்.

6 முதல் 8 மாதக் குழந்தைக்கான திட உணவு வகைகள்

காய்கள்

 • கேரட்
 • மஞ்சள் பூசணிக்காய்

பழங்கள்

 • வாழைப்பழம்
 • ஆப்பிள்
 • சப்போட்டா
 • பேரிக்காய்
 • பப்பாளி
 • பழுத்த அவகேடோ
 • மாதுளை சாறு

பருப்பு வகைகள் 

 • பாசிப்பருப்பு
 • துவரம்பருப்பு
 • உளுத்தம்பருப்பு

தானிய வகைகள் 

 • ஓட்ஸ்
 • இயற்கை அரிசி
 • ராகி மற்றும் சோளம்

பால் வகைகள்

 • நெய்
 • பனீர்
 • யோகர்ட்
 • மற்றும் முட்டை

8 முதல் 10 மாதக்குழந்தைகளுக்கான உணவு வகைகள்

காய்கள்

 • உருளைக்கிழங்கு
 • சுரைக்காய்
 • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
 • பீர்க்கங்காய்
 • வெள்ளரி
 • காலிப்ளவர்
 • பீட்ரூட்
 • ப்ராக்கோலி
 • கீரை வகைகள்

பழங்கள்

 • ஆரஞ்சு
 • கிவி
 • தர்பூசணி
 • முலாம்பழம்

தானியங்கள் 

 • முழுமையான கோதுமை
 • ப்ரவுன் பாசுமதி அரிசி
 • இயற்கையில் விளைந்த அரிசி
 • சோளம்
 • பார்லி

பால் பொருள்கள் 

 • எருமைத்தயிர்
 • பாயசம்
 • செரல் வகைகள்

10 முதல் 12 மாதக்குழந்தைகளுக்கான உணவுப் பட்டியல்

காய்கள்

 • சேனைக்கிழங்கு
 • சர்க்கரை வள்ளிக்கிழங்கு
 • குடை மிளகாய்
 • முருங்கைக்காய்

பழங்கள்

 • மாம்பழம்
 • ஸ்ட்ராபெரி
 • திராட்சை
 • ப்ளூ பெரி

பருப்பு வகைகள் 

 • சுண்டல் கடலை
 • பாசிப்பயிறு

இறைச்சி வகைகள் 

 • கோழி
 • மீன்

மேற்கண்ட உணவுப்பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள உணவு வகைகளை நன்கு வேக வைத்து மசித்து உணவாக குழந்தைகளுக்கு ஊட்டி விட வேண்டும். மாலை வேளைகளில் சூப் செய்து கொடுப்பது நல்லது.  குழந்தைகளுக்குத் திட உணவை இரவு நேரங்களில் கொடுக்காதீர்கள். மாலை வேளைகளில் பழம் அல்லது காய்  உணவினை வேக வைத்துக் கொடுக்கலாம்.

இந்த உணவுகள் உங்கள் குழந்தைகளுக்கு எந்த வகையில் நன்மை செய்யும்

செரல்ஸ் , தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்

செரல்ஸ் எனப்படும் தனிப்பட்ட திட உணவுகள் குழந்தைகளுக்குத் தேவையான மாவு சத்துக்களை 60 முதல் 70 சதவிகிதம் வரை தருகிறது. இதனால் குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவும் துடிப்பாகவும் வளர்கிறது.

அரிசி பெரும்பாலும் ஒவ்வாமை தராத உணவுகளில் ஒன்றாகும்

விரைவில் ஜீரணமாகி விட உதவுகிறது

பழங்கள்

அதிகமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியவை

அதிக அளவில் விட்டமின்கள் கொண்டுள்ளது

காய்கள் 

கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கெரோட்டின் அடங்கி உள்ளது

உங்கள் சிறு குழந்தைகளுக்குத் தேவையான நார்ச்சத்துக்கள் இதில் இருந்து கிடைக்கின்றன

பால் பொருள்கள் 

பால் சூப்பர் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது காரணம் அதிக அளவில் விட்டமின் மற்றும் மினரல்களைக்  கொண்டிருக்கிறது

புரதங்கள் 

குழந்தைகளின் உடல் உறுப்பு வளர்ச்சிக்கு உதவுகிறது

தசை வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டசத்து அளிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது

ஒவ்வாமை தரும் உணவு வகைகள்

ஒரு சில உணவு வகைகள் பெரியவர்களுக்கே ஒவ்வாமை தருகின்றன. அதில் ஒரு சில உணவுகள் உயிருக்கே ஆபத்தாகவும் முடிகின்றன. அப்படியான ஒவ்வாமை பண்புகள் கொண்ட சில உணவு வகைகளை பார்க்கலாம் (3).

 • வேர்க்கடலை
 • மீன்களில் ஒரு சில வகைகள்
 • ஸ்ட்ராபெரி
 • சிப்பிகள்
 • தேங்காய் உணவுகள்
 • கடுகு
 • சோயா
 • லவங்கப்பட்டை

மேற்கண்ட உணவுகளைக் கொடுக்கும்போது கவனமாக சிறு அளவில் கொடுத்து நான்கு நாள்கள் வரை குழந்தையின் போக்கினை கவனிக்கவும். அதன்பின்னர் குழந்தைக்கு உணவு ஒத்துக்கொண்டால் மட்டுமே தொடர்ந்து சிறு அளவில் கொடுத்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவும். எந்தப் புதிய உணவினை நீங்கள் கொடுத்தாலும் இதனைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

வாயுத் தொந்தரவு ஏற்படுத்தும் உணவுகள்

 • ஓட்ஸ்
 • பேரிக்காய்
 • முட்டைகோஸ்
 • காலிப்ளவர்
 • சிட்ரஸ் பழங்கள்

மேற்கண்ட உணவுகள் ஜீரணமாக மிகவும் தாமதமாகும். அதனால் குழந்தைக்கு வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலி போன்றவை ஏற்படலாம் (4). அதனால் மேற்கண்ட உணவு வகைகளை நீங்கள் இரவு நேரங்களில் கொடுக்க வேண்டாம்.

குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாத உணவு வகைகள்

Image: Shutterstock

முதல் 12 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத உணவு வகைகள் சில உள்ளன. இந்த உணவுகள் குழந்தைக்கு தொண்டையில் சென்று அடைத்துக் கொள்ளலாம். ஒரு சில உணவுகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் உப்புத்தன்மை இருக்கலாம். ஒரு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் (5). அப்படியான சில உணவுகளை இங்கே பார்க்கலாம்.

 • பச்சைகாய்கறிகளான பட்டாணி, செலரி மற்றும் பீன்ஸ் வகைகள்
 • பச்சையான அல்லது வேகவைத்த முழு மக்காச்சோளம்
 • பழங்களில் கடினமான வகைகள்
 • திராட்சை, பெரி வகைகள், முலாம்பழ வகைகள்
 • உலர் திராட்சை மற்றும் நட்ஸ் வகைகள்
 • செரி தக்காளி வகைகள்
 • சாசேஜ் போன்ற பாதி வேக வைக்கப்பட்ட இறைச்சி வகைகள்
 • பெரிய அளவிலான இறைச்சி துண்டுகள்
 • பெரிய துண்டுகளால் ஆன சீஸ் வகைகள்
 • பீனட் பட்டர் மற்றும் அது சார்ந்தவை
 • கடினமான மிட்டாய் மற்றும் ஜெல்லி பீன்ஸ் வகைகள்
 • பாப்கார்ன், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை
 • மார்ஷ்மெல்லோ இனிப்புகள்
 • பேக்கிங் செய்த உணவு வகைகள்
 • சோடா போன்ற குளிர்பான வகைகள்

உங்கள் குழந்தைக்குத் திட உணவு தரும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

 • குழந்தைக்கு உணவு கொடுக்கும் முன் அந்தக் கிண்ணங்களை ஸ்டெரிலைஸ் செய்ய வேண்டும்
 • உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
 • குழந்தைக்கு உணவூட்டும் போது கவனம் அதில் இருக்க வேண்டும். குழ்நதை விக்கலாம் தொண்டை அடைப்பு ஏற்படலாம். கவனமாக ஊட்டவும்.
 • தயார்  செய்த ஒரு மணி நேரத்திற்குள் உணவு வகைகளைக் கொடுத்து விடவும்
 • தாமதமாகக் கொடுப்பதால் ஊட்டச்சத்துக்கள் இழப்பு நேரிடலாம்
 • சர்க்கரை, சாஸ் போன்ற பொருள்களை உணவில் சேர்க்காமல் கொடுப்பதே நல்லது
 • சிறு கிண்ணங்களில் வைத்து ஊட்டவும். பெரிய பாத்திரங்கள் வேண்டாம்.
 • ப்ளெண்டர், ஸ்டைனர் போன்ற பாத்திரங்களை குழந்தை உணவு கலக்க பயன்படுத்துங்கள்
 • மீதமான உணவைத் தூக்கி எறிந்து விடுங்கள்
 • ஆரம்ப காலத்தில் உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கலாம். ஆனால் மெதுவாகப் பழக்குங்கள்.
 • மெதுமெதுவாக புதுப்புது உணவுவகைகளை ருசி பார்க்கச் செய்யுங்கள். எல்லாவித சுவைக்கும் உங்கள் குழந்தை பழக வேண்டும்.
 • புதிய உணவு வகைகளைக் கொடுக்கும்போது பொறுமையாக ஊட்டி விடுங்கள். உங்கள் குழந்தை தனக்கான சுவையை தேர்ந்தெடுக்க தாமதம் ஆகலாம்.

இறுதியாக

நமது தமிழ் கலாச்சாரம் , முன்னோர் அறிவுரை இதன்படி பின்பற்றினாலே பெரும்பாலும் ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு உறுதியாகி விடும். ராகிக்கூழ் குழந்தைகள் உடலைத் திடமாக்கும் . அதுவே தமிழ் கலாச்சாரத்தில் குழந்தைகளின் முக்கிய உணவாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமும் ஊட்டச்சத்தும் இணைந்த ஒரு கலவையில் உஙகள் குழந்தைக்கான உணவு வகைகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

References: