உங்களுக்கு ஏற்படுவது பிரசவ வலி தானா என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்

Delivery Pain Symptoms In Tamil

Image: Shutterstock

பிரசவம் என்பதே கொஞ்சம் கவனமாக அணுக வேண்டிய ஒரு விஷயம்தான் இல்லையா. கர்ப்ப காலத்தின் சிரமங்கள் முடிந்து அதன் உச்சத்தை எட்டும் கணங்கள் தான் பிரசவ வலி என்பது. இதுவரை உங்கள் கருப்பையில் பத்திரமாக இருந்த உங்கள் குழந்தை வெளியேறும் நேரம் வந்து விட்டது என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காக உடலில் ஒரு சில அறிகுறிகள் ஏற்படுகின்றன.

பிரசவ அனுபவம் என்பது பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. உங்களுக்குத் தெரிந்த பல தாய்மார்களுக்கும் இதே தான் நடந்திருக்கிறது. ஆனால் ஒரு சிலருக்கு கடுமையான சிரமங்களுடன் ஒரு சிலருக்கோ பூ மலரும் பதத்துடன் என்று மாறுபட்ட அனுபவங்களைத் தருகிறது பிரசவம். 7 மாதங்கள் தொடங்கியதில் இருந்தே பல்வேறு விதமான பாதுகாப்புடன் நீங்கள் இருக்க வேண்டும். பிரசவ நேரம் குறித்துக் கொடுத்த பின்னர் அதில் இருந்து 1 வாரம் முன்னதாகவோ பின்னதாகவோ பிரசவம் நிகழக் கூடும் என்பது மருத்துவர்களின் கணிப்பு. 60 சதவிகித பெண்களுக்கு குறிப்பிடப்பட்ட தேதியிலோ அதற்கு முன்னதாகவோ பிரசவம் நடந்து விடுகிறது (1).

கர்ப்பம் அடைந்த 37வது வாரம் முதல் 42வது வாரத்திற்குள் பிரசவ நேரம் என்பது நிகழ்கிறது. இதற்கு முன் ஏற்படும் பிரசவங்கள் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்கள் தாண்டி ஏற்படும் பிரசவ வலி என்பது தாமதமான பிரசவ வலி என்று கூறப்படுகிறது. இந்த நேரங்களில் மருத்துவர் பிரசவ வலி ஏற்படுத்தும் செயற்கை முறைகளைத் தூண்டி விடுவார் (2).

பிரசவ வலி என்றால் என்ன நமக்கு பிரசவ நேரம் நெருங்கி விட்டது என்பதை நாம் எப்படித் தெரிந்து கொள்வது என்கிற தவிப்பு ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும். அதற்காகவே இந்தக் கட்டுரை உதவுகிறது. பொய்வலி , இடுப்பு வலி போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் உங்களுக்கான பிரசவ வலி எது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இந்த 10 குறிப்புகள் உதவி செய்யலாம்.

1. கருப்பையில் இருந்து குழந்தை இறங்கும்

உங்கள் இடுப்பு பகுதியில் இருந்து குழந்தை தலை கீழே இறங்கி இருக்கும். பெரியவர்கள் இதனை சுலபமாகக் கண்டறிவார்கள். உங்கள் வயிறு கீழ் நோக்கி இறங்கி இருக்கும். இதனால் உங்கள் இதயப் பகுதி மற்றும் வயிற்று பகுதியின் அழுத்தம் குறையும். அதிகமாகவும் சுலபமாகவும் உங்களால் உணவு எடுத்துக் கொள்ள முடியும் (3). நிறைய பெண்களுக்கு பிரசவ நேரத்திற்கு 2 வாரத்திற்கு முன்பாகவே இது நிகழ்ந்து விடும். ஒரு சில பெண்களுக்கோ அதன் அறிகுறி தெரியாமல் போகலாம்.

2. அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்

சிறுநீர் கழிப்பதற்கான தூண்டுதல் ஏற்படுவதற்கு குழந்தையின் தலை இடுப்புக்கு கீழே இறங்கியது காரணமாக இருக்கலாம். குழந்தை தலையின் தாழ்வு நிலை சிறுநீர்ப்பையில் இன்னும் அதிக அழுத்தத்தை அளிக்கிறது, எனவே பிரசவத்தை நெருங்கும் பல பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணரக்கூடும். குழந்தை வயிற்றில் இருந்து இடுப்பிற்கு இறங்கும் போது, ​​கீழே இருந்த உதரவிதானத்தில் குறைந்த அழுத்தம் இருப்பதால் சுவாசம் எளிதாகிவிடும் (4).

3. கருப்பை வாய் அகலமாகும்

குழந்தை முழுமையாக வெளியேறுவதற்கு வசதியாக பெண்ணின் கருப்பை வாயானது தன்னை அகலப்படுத்தும். இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிய முடியும். பெரும்பாலும் இதனை மருத்துவ பரிசோதனை மூலமாக மட்டுமே அறிந்து கொள்ள முடியும். பிரசவ நேரத்திற்கு 10 நாட்கள் முன்பிருந்தே கூட இதன் அகலம் அதிகரிக்கத் தொடங்கலாம். அதிகபட்ச அகலம் என்பது 10செமீ ஆகும் (5).

4. சளித்திசுக்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும்

சளித் திசுக்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறுவது பிரசவ நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறியப்பட்ட அறிகுறியாகும். கருப்பை வாய் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான சளி பொதுவாக கர்ப்ப காலத்தில் கருப்பை வாய் திறப்பை மூடி வைத்திருக்கும். இந்த சளித் திசுவானது பிரசவத்திற்கு முன் வெளியேற்றப்பட வேண்டும். குழந்தையின் தலையிலிருந்து வரும் அழுத்தம் யோனியிலிருந்து சளி போன்ற நீர்ப்படலம் வெளிப்படுத்தப்படுவதற்கு காரணமாகிறது, சில சமயங்களில் இரத்தம் கலந்த சளித்திசுக்களும் வெளியேறலாம். சில பெண்களுக்கு, பிரசவம் தொடங்கும் வரை சளி திசுக்கள் வெளியேற்றப்படுவதில்லை; மற்றவர்கள் பிரசவத்திற்கு முந்தைய நாள் இத்தகைய சளி வெளியேற்றத்தைக் கவனிக்க முடியும்.

5. கருப்பை வாய் சன்னமாக மாறும்

கருப்பை வாய் அகலமாவதைத் தொடர்ந்து கருப்பை வாய் தன்னையுடைய அடர்த்தியை இழந்து மிகவும் மெலிதாக மாறும். பிரசவ நேரத்திற்கு முந்தைய வாரத்தில் இது நிகழ்கிறது.ஏனெனில் கருப்பை வாய் மெலிதாக மாறும் பட்சத்தில் கருப்பை வாய் அகலத்திறக்கும் பணியானது சுலபமானதாக மாறி விடுகிறது. இதுவும் மருத்துவ பரிசோதனை மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஒரு அறிகுறியாகும்.

6. உங்கள் உள்ளுணர்வுகளில் மாற்றம் ஏற்படும்

குழந்தை பிறக்கப் போகிறது என்பதை உங்கள் உள்ளுணர்வு முன் கூட்டியே உணர்ந்து விடும். அதனால் அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள். உங்கள் குழந்தைக்கான அறையைத் தயார் செய்வது, அலங்கரிப்பது போன்ற வேலைகளில் உங்களை அறியாமல் ஈடுபடுவீர்கள். உங்கள் பிரசவ நேர சிரமங்கள், மூச்சு திணறல்கள் இதெல்லாம் இல்லாமல் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாவும் இருப்பீர்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து வகை உயிரினங்களுக்கும் இந்த உள்ளுணர்வு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (6).

7. பிரசவ வலி

விட்டு விட்டு ஏற்படும் பிரசவ வலி என்பது தான் உண்மையான குழந்தை வெளியேறுவதற்கான அறிகுறி எனலாம். இந்த வலி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம். குத்துவது போன்ற வலி, இடிப்பது போன்ற வலி, வயிற்றை இறுக்கும் வலி அல்லது மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வலி என்பது போல பல்வேறு வகைகளில் பிரசவ வலியானது ஏற்படலாம் (7).

கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத முடிவில் பிரசவ வலிக்கான அறிகுறிகள் மிக லேசானதாக தோன்றலாம். அது பொய் வலி என்று கூறப்படுகிறது. மிக லேசான நேரங்களில் வந்து மறைந்து விடும் (8). ஆனால் அரை மணிக்கொருமுறை அல்லது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இடுப்பு வலி அல்லது வயிற்று வலி ஏற்பட்டால் கண்டிப்பாக அது பிரசவ வலியேதான்.

8. வயிற்றுப்போக்கு

பிரசவ வலியின் ஆரம்ப கட்டத்தில், உடல் புரோஸ்டாக்லாண்டின்களை வெளியிடுகிறது, இது கர்ப்பப்பையை மென்மையாக்குகிறது மற்றும் கருப்பை சுருங்க உதவுகிறது. கூடவே குடல் இயக்கத்தையும் தூண்டுகின்றன, அதனால் இயற்கையாகவே குழந்தை வெளியேற வழிவகுக்கும் வகையில் குடலைக் காலி செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. இது ஒரு நல்ல அறிகுறியாகும், ஏனெனில் இது உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் பிரசவத்தின்போது எந்த அஸௌகரியத்தையும் தவிர்க்க உதவுகிறது (9).

9. கீழ் முதுகு வலி

பல பெண்கள் பிரசவ நேரங்களில் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள், குறிப்பாக குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கும் போது, ​​கீழ் முதுகில் மந்தமான வலி வரும் (10). முதுகுவலி மற்ற இடங்களில் உணரப்பட்ட வலி போன்றும் இருக்கலாம் அல்லது தானாகவே ஏற்படலாம். ​​பிரசவத்திற்காக உடல் தயாராகும் சமயங்களில் , குறிப்பாக இடுப்பு பகுதியில், மூட்டுகள் தளர்வதைப் பல பெண்கள் கவனிப்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு முதல் மூன்ற மாத கால கர்ப்பத்தின் இறுதிப் பகுதியில் இருந்தே இது நிகழத் தொடங்குகிறது.

10. பனிக்குடம் உடைதல்

அம்னோடிக் சவ்வுகளின் சிதைவு அல்லது பனிக்குடம் உடைதல் என்பது எப்போதுமே உடனடி பிரசவ நேரத்திற்கான அடையாளம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் (11). பனிக்குடம் உடைவது என்பது பெரும்பாலான திரைப்படங்களில் காட்டப்படுவது போல அதிகப்படியான நீர் கொட்டுவது போல எல்லாம் இருக்காது. சில நேரங்களில் சொட்டு சொட்டாக ஏற்படலாம். அம்னியோடிக் திரவம் என்பது நிறமற்றது மற்றும் வாசனை அற்றது. மிகவும் தூய்மையான நீர் போன்றது எனலாம். சிறு நீருக்கும் இதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. உங்கள் பனிக்குடம் உடைந்து விட்டதாக நீங்கள் கருதினால் உடனடியாக மருத்துவரை அணுகி விடுங்கள்.

References: