தாய்ப்பால் அதிகம் சுரக்க அவசியமான 15 உணவுப் பொருள்கள்

Image: Shutterstock

IN THIS ARTICLE

தாய்மை எனும் ஆசிர்வாதம் பெற்றுள்ள தாய்மார்கள் அனைவருக்கும் குழந்தை வளர்ப்பு பற்றிய ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். உங்கள் பிஞ்சுக் குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் எல்லாவற்றிலும் சிறந்ததையே தர நீங்கள் விரும்புவீர்கள்.

அந்த ஆயிரம் கேள்விகளில் முதன்மையாக இருப்பது எதனை சாப்பிட்டால் ஆரோக்கியமான தாய்ப்பாலை நமது குழந்தைக்குக் கொடுக்க முடியும் என்பதாகவே இருக்கும். தாய்ப்பால் தான் குழந்தையின் ஆயுள் முழுமைக்கும் தேவையான சத்து மற்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. அப்படியான தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன உணவுகள் எடுக்கலாம் என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும்.

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் காலங்கள்தான் பெண்கள் அதிக கவனமாக இருக்க வேண்டி வரும். நீங்கள் உணவாக எடுத்துக் கொள்ளும் எதுவும் உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியத்தை நல்க வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தாய்ப்பால் சுரப்பை எப்படி அதிகப்படுத்தலாம் ?

இறைக்கிற கிணறுதான் ஊறும் எனும் கிராமத்து பழமொழிக்கேற்ப உங்கள் பிஞ்சுக் குழந்தைக்கு நீங்கள் எவ்வளவு அதிக முறை தாய்ப்பால் தருகிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தாய்ப்பால் சுரப்பு ஏற்படும். இதுதான் அடிப்படையான தாய்ப்பால் சுரப்புக்கான வழிமுறையாகும்.

உங்கள் மார்பகங்களில் ஊறும் பாலின் உற்பத்தி குறையக்குறைய உடல் தானாகவே அங்கே பால் சுரப்பதை அதிகரிக்கிறது. மார்பகங்களில் பால் குடிக்கப்படாமல் அப்படியே இருந்தால் அல்லது குழந்தை குறைவாகக் குடித்தால் மார்பகங்களின் பால் உற்பத்தியும் குறையும்.

குழந்தை பால் குடிக்கும் நேரத்திற்கான அட்டவணைகள் போடாமல் அவர்களுக்கு அடிக்கடி பால் கொடுப்பது தாய்ப்பால் சுரப்பதற்கான சிறந்த முறையாகப் பார்க்கப்படுகிறது. அப்படிக் கொடுத்தும் உங்களுக்குப் பால் சுரப்பு குறைவாக இருந்தால் கீழ்க்கண்ட உணவு முறைகளை முயற்சிப்பது நன்மை தரும்.

1. ஓட்ஸ்

 • ஓட்ஸ் உணவினைத் தயாரிப்பது மிகச் சுலபமானது.
 • ஓட்ஸ் கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படாமல் காக்கிறது
 • ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது
 • காலையில் ஒரு கப் ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்தது
 • ஓட்ஸ் உங்கள் பசியைப் போக்கவில்லை என்றால் ஓட்ஸ் பிஸ்கட்களை சாப்பிடலாம்.

2. கசகசா

 • பால் கொடுக்கும் நேரத்தில் தாய்மார்களுக்கு ஓய்வு தேவை
 • கசகசாவில் உடலுக்கு ஓய்வு கொடுக்கும் தன்மை உள்ளது
 • உங்கள் உணவில் மிகச் சிறிய அளவிலேயே இதனைச் சேர்க்க வேண்டும்
 • தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் கசகசா உங்கள் உடல் மற்றும் மனதிற்கு அமைதி கொடுக்கிறது
 • கஞ்சி மற்றும் புட்டிங் மீது ரோஸ்ட் செய்யப்பட்ட கசகசாவைத் தூவி சாப்பிடலாம்

3. பசும்பால்

 • பசும்பாலில் சுண்ணாம்பு சத்து மற்றும் EFA இருக்கிறது.
 • இது பால் சுரப்பை இயல்பாகவே அதிகரிக்கிறது.
 • தாய்ப்பாலின் போது பால் குடித்து வந்தால் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு பால் ஒவ்வாமை ஏற்படாது
 • தினமும் நான்கு முறை பால் அருந்துவது தாய்ப்பால் சுரக்க உதவி செய்யும்.

4. முருங்கைக்காய்

 • முருங்கைக்காயில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் இருக்கிறது
 • தாய்ப்பால் சுரக்க முருங்கைக்காய் சிறந்தது
 • உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
 • நரம்பு மண்டலத்துக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது
 • முருங்கைக்காயை வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது
 • முருங்கை இலை கூடத் தாய்ப்பால் சுரப்புக்கு உதவி செய்கிறது

5. சுண்டல் கடலை

 • அதிகப் புரதச் சத்து நிரம்பியது சுண்டல் கடலை
 • கேல்சியம் மற்றும் விட்டமின் பி மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது
 • இரவில் ஊறவைத்த சுண்டல்கடலையை காலையில் வேகவைத்து சாப்பிடலாம்
 • சுண்டல்கடலையை வேகவைத்து சேலட் போலவும் சாப்பிடலாம்

6. பாதாம் பருப்பு

 • பாதாம் பருப்பில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் ஈ அடங்கியிருக்கிறது
 • பிரசவ கால சரும வரிகளால் ஏற்படும் அரிப்பினை விட்டமின் ஈ போக்குகிறது
 • ஒமேகா 3 தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க உதவுகிறது
 • ஓட்ஸ் உணவு அல்லது பாலில் பாதாமைத் தட்டி சேர்த்து உண்ணலாம்.

7. சர்க்கரை வள்ளிக்கிழங்கு

 • சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது
 • ஆற்றல் தரும் நார்ச்சத்துக்கள் அடங்கி உள்ளன
 • மெக்னீசியம் போன்ற தசையைத் தளர்ச்சி அடையச் செய்யும் சத்துக்கள் உள்ளன
 • கேல்சியம் , விட்டமின் பி 3 அடங்கியது
 • குறைந்த நார்ச்சத்து கொண்ட உணவுடன் இதனைச் சேர்த்து உண்ணலாம்.
 • வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆப்பிளுடன் சேர்த்து ஜூஸாக்கி குடிக்கலாம்.

8. சால்மன் மீன்

 • சால்மன் மீனில் ஒமேகா 3 மற்றும் EFA அடங்கி உள்ளது
 • இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு மிகவும் அவசியமான உணவு
 • உங்கள் தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அளவை சால்மன் மீன் அதிகரிக்கிறது
 • வேகவைத்த, அல்லது கிரில் செய்த சால்மன் மீன்கள் உடலுக்கு நன்மை தரும்.

9. ப்ரவுன் அரிசி

 • பிரவுன் அரிசியில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை காணப்படுகிறது
 • ஹார்மோனைத் தூண்டுவதன் மூலம் தாய்ப்பாலைச் சுரப்பை அதிகரிக்க செய்கிறது
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உடல் சோர்வை நீக்குகிறது
 • பசியைத் தூண்டுகிறது. அதிகமாகச் சாப்பிடுவதால் அதிகமான தாய்ப்பால் சுரக்கிறது.
 • அரைமணி நேரம் ஊறவைத்த ப்ரவுன் அரிசியை வேகவைத்து சாதம் போலச் சாப்பிடவும்

10. கேரட்

 • ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் அதிக அளவு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது
 • விட்டமின் ஏ தாய்ப்பாலை ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றுகிறது
 • கீரைகளைப் போலவே கேரட்டில் தாய்ப்பால் சுரக்கும் தன்மை அதிகம் இருக்கிறது.
 • கேரட்டை பச்சையாகவோ வேக வைத்தோ நீங்கள் உண்ண முடியும்

11. கருப்பு எள் விதைகள்

 • கருப்பு எள்ளில் கேல்சியம் உள்ளது.
 • இது தாய்ப்பால் சுரக்க உதவுகிறது
 • பால், பாதாம் என உணவுகளில் எள்ளை அரைத்தோ தூவியோ சாப்பிடலாம்
 • எள் அளவாக சாப்பிட வேண்டும்

12. பூண்டு

 • தாய்ப்பால் அதிகரிக்க பூண்டு சிறந்த உணவாகக் கூறப்படுகிறது
 • இதில் உள்ள ரசாயனங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கின்றன
 • அது மட்டும் அல்லாமல் குழந்தை மற்றும் உங்கள் உடல்நலத்தைக் காக்கிறது
 • புற்று நோய் வராமல் தடுக்கிறது
 • சூப் மற்றும் சமைக்கும் உணவுகளில் பூண்டினை அதிகம் சேர்க்கலாம்
 • அல்லது கையளவு பூண்டினை நெய்யில் வறுத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

13. சோம்பு

 • சோம்பு உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கிறது
 • இதன் ஜீரணத் தன்மை குழந்தையின் வயிற்றுக்கும் ஏற்றது
 • சோம்பு சாப்பிடுவதால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது
 • சமையலில் சிறிதளவு சோம்பு சேர்க்கலாம்
 • உணவு உண்டு முடித்தபின்னர் சிறிதளவு சோம்பு சாப்பிடலாம்

14. வெந்தயம்

 • வெந்தயம் தாய்ப்பால் அதிகரிக்க சிறந்த உணவுகளில் ஒன்றாகும்
 • முளை கட்டிய வெந்தயமுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் மலசிக்கல் குணமாகும்
 • உங்கள் தாய்ப்பால் உற்பத்தியை இது அதிகரிக்கிறது
 • வெந்தய இட்லி, வெந்தய தோசை வெந்தயக் குழம்பு என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்
 • தாளிக்கும் பொருள்களில் வெந்தயம் சேர்க்கலாம்

15. தண்ணீர் மற்றும் பழச்சாறுகள்

 • அடிக்கடி நீர் குடிப்பதும் பழச்சாறு அருந்துவதும் தாய்ப்பால் சுரப்புக்கு வழிவகுக்கும்
 • ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போதும் பாலின் அடர்த்தியும் அளவும் அதிகரிக்கும்
 • பால் கொடுப்பதால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை இது நீக்குகிறது
 • குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்னர் நீர் அருந்தலாம்
 • அல்லது குழந்தைக்குப் பால் கொடுத்த பின்னர் நீர் அல்லது பழச்சாறு அருந்தலாம்

தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

 • தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் வாயு அதிகரிக்கும் உணவினைத் தவிர்க்கலாம்.
 • உருளைக்கிழங்கு , மாங்காய் மற்றும் வாழைக்காய்களைத் தவிருங்கள்.
 • சைவமுறை உணவு உண்பவர் என்றால் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவைச் சாப்பிடுகிறீர்களா என்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள்
 • தைம், பெப்பெர்மிண்ட் மற்றும் பார்ஸ்லி, முட்டைகோஸ் போன்ற உணவுப்பொருள்களைத் தவிர்த்து விடுங்கள்.

தாய்ப்பால் சுரக்க சில கை வைத்தியக் குறிப்புகள்

Image: Shutterstock

குழந்தைக்குத் தான் சரியான அளவில்தான் தாய்ப்பால் கொடுக்கிறோமா என்கிற சந்தேகம் இல்லாத தாய்மார்களே இல்லை எனலாம். அவர்கள் தங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பை அடிக்கடி சோதிப்பதன் மூலம் சரியான அளவு தாய்ப்பால் குழந்தைக்குக் கொடுக்கப்படுகிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும். இது தவிர தாய்ப்பால் சுரக்க சில வீட்டுக் குறிப்புகள் :

அடிக்கடி பால் கொடுங்கள்

தேவைக்கு ஏற்ப சுரக்கும் தன்மை கொண்டது தாய்மார்களின் மார்பகம். ஆகவே அடிக்கடி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அதிக அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமாறு இயற்கை வடிவமைத்திருக்கிறது.

அதிகப்படியான பாலைப் பீய்ச்சி எடுங்கள்

உங்கள் குழந்தையால் அதிக அளவு பால் குடிக்க முடியவில்லை என்றால் குழந்தை குடித்து முடிந்ததும் அதிகளவு இருக்கும் தாய்ப்பாலை பீய்ச்சி வெளியே எடுங்கள். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

இடைவெளி கொடுங்கள்

ஒரு இரண்டு மூன்று நாட்கள் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுங்கள். அதன் பின்னர் சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இது அம்மாவாகிய உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சம அளவுப் பாலைப் பருக விடுங்கள்

இரண்டு மார்பகங்களிலும் சுரக்கும் பாலை குழந்தைக்கு சம அளவில் கொடுங்கள். ஒருமுறை இடது மார்பகம் என்றால் அடுத்த முறை வலது மார்பகத்தில் குடிக்க விடுங்கள். இதனால் இரண்டு மார்பகங்களிலும் சம அளவு தாய்ப்பால் சுரக்கும்.

செயற்கை முறைகளை உபயோகிக்க வேண்டாம்

குழந்தைக்கு சுலபமாக இருக்க வேண்டும் என்று வெளியே விற்கும் சிலிகான் நிப்பிளை உங்கள் மார்பகங்களில் பொருத்துவது சரியல்ல. அதனைத் தவிர்த்து விடுங்கள். மருத்துவ நிர்பந்தம் ஏற்பட்டால் ஒழிய இப்படியான செயற்கை விஷயங்களைத் தவிர்த்து விடுங்கள்.

திட உணவு தர வேண்டாம்

குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை திட உணவைத் தவிர்த்து விடுங்கள். தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சரியான ஓய்வு வேண்டும்

உங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் உடல் ஆற்றல் இழந்து ஓய்வு வேண்டி கேட்கும் சமயம் தேவையான ஓய்வை உடலுக்கு கொடுங்கள். அந்த சமயம் வீட்டு வேலை மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்

கர்ப்ப காலங்களைப் போலவே தாய்ப்பால் கொடுக்கும் காலங்களும் குழந்தைக்கு மிக முக்கியமானது. இந்த நேரங்களில் மது மற்றும் புகைப்பழக்கத்தை நீங்கள் தவிர்ப்பது குழந்தையின் மூளை மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.

மாத்திரைகளில் கவனம் வேண்டும்

உடல் உபாதைகள் காரணமாக நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மற்ற மாத்திரைகள் உங்கள் தாய்ப்பால் உற்பத்திக்குத் தடை செய்யுமா அல்லது குழந்தைக்கு பக்க விளைவுகள் தருமா என்பதை மருத்துவரிடம் கலந்து பேசி அறிந்து அதன் அடிப்படையில் மாத்திரைகள் சாப்பிடுங்கள்.

சரியான உள்ளாடை அணிய வேண்டும்

தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் இறுக்கமான உள்ளாடைகள் உங்கள் தாய்ப்பால் சுரப்பிற்கு தடையாக இருக்கலாம். இதனால் சரியான மார்பக உள்ளாடைகளை அணியுங்கள்.

மார்பக மசாஜ்

இறுக்கமான மார்பகத்தில் பால் கட்டிக் கொள்வதாலும் பால் சுரக்கத் தடை ஏற்படும். அப்படியான கட்டிகளை மென்மையான மசாஜ் மூலமே சரி செய்ய வேண்டும். அடிக்கடி வெந்நீர் மூலம் டவலை நனைத்து மார்புகளில் வைத்து எடுக்கலாம். இதனால் பால் கட்டும் சிக்கல்கள் சரியாகும். உங்களுக்கு நீங்களே மென்மையாக மசாஜ் செய்வது நல்லது.

ஸ்பரிசங்களோடு பால் கொடுங்கள்

ஆடைகள் போன்றவை இல்லாமல் குழந்தையின் உடல் உங்கள் உடலோடு ஸ்பரிசமாகும் வரை பால் கொடுங்கள். ஒரு டயப்பர் உடன் உங்கள் குழந்தை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவரின் உடலைப் போர்வையால் அல்லது மென்மையான துணியால் சுற்றிக் கொண்டு பால் கொடுக்கலாம்.

பம்ப் செய்வது நல்லது

பால் சுரப்பை பராமரிக்க குழந்தை பால் குடித்து முடித்த இடைவெளிகளில் பம்பிங் செய்வது நல்லது. 2 முதல் ஐந்து நிமிடம் வரை பம்பிங் செய்வது பால் சுரப்பு தடைபடாமல் இருக்க உதவி செய்யும்.

தாய்ப்பால் கொடுப்பதன் தாத்பர்யம் இதுதான்

உங்கள் குழந்தையின் உணவுத் தேவைக்கேற்றபடி உங்கள் உடல் செயல்புரிகிறது. அது எப்படி என்றால்

 • உங்கள் குழந்தையின் உறிஞ்சும் தன்மைதான் பாலை வெளிக்கொணர்கிறது
 • குழந்தை உறிஞ்சும்போது உங்கள் மூளைக்குத் தகவல் போகிறது.
 • மூளை தாய்ப்பாலை வெளியே தள்ள ஆக்சிடாஸினை உற்பத்தி செய்கிறது
 • ரத்த திசுக்களின் வழியே மூளை தரும் செய்தி மார்பகங்களை வந்தடைகிறது
 • ப்ரோலாக்டின் ஹார்மோன் மூலம் பால் சுரப்பு தூண்டப்படுகிறது
 • குழந்தை தரும் சப்தங்கள் மூலம் பால் குழந்தைக்கு செல்வதை மூளை உறுதி செய்கிறது.

இது பால் கொடுக்கும் நேரம் என்பதை எப்படி உங்கள் உடல் அறிந்து கொள்கிறது

உங்கள் குழந்தைக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் உங்கள் உடல் எப்படி அதனை உணர்ந்து கொள்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறதா.. அதற்கான விடை இதோ.

 • பிரசவம் முடிந்து பால் கொடுக்கும் வழக்கம் பெற உடல் இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.
 • உங்களுக்கு மார்பங்களில் மெல்லிய கூசும் தன்மை ஏற்படும்
 • சிலசமயங்களில் உங்கள் குழந்தை அழுதாலே மார்பகங்களில் மெல்லிய அழுத்தம் ஏற்படுவதை உணர முடியும்.
 • குழந்தைக்கு பால் கொடுக்கும் நேரம் தவறினால் மார்பகங்களில் ஒருவித அசௌகரியம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.
 • பல பெண்கள் பால் கொடுக்கும் நேரம் வந்து விட்டால் தானாகவே மார்பகங்களில் இருந்து தாய்ப்பாலை ஒழுக விடுவார்கள். இது இயற்கையாக நிகழ்வது.

தாய்ப்பால் கொடுப்பதை சிறப்பான அனுபவமாக மாற்றுவது எப்படி

 • குழந்தைக்கு அமைதியான அறையில் பாலூட்டுங்கள்
 • அமைதியாக இருக்கப் பழகுங்கள்
 • மேலே குறிப்பிட்ட உணவுப்பொருள்களை சாப்பிடுங்கள்
 • தாய்ப்பால் கொடுக்கும் முன் வெந்நீரில் நனைக்கப்பட்ட டவலை மார்பகங்களில் போட்டு எடுங்கள்
 • இது தாய்ப்பாலினை இளக வைத்து குழந்தைக்கு குடிக்க வசதி செய்து தரும்
 • தாய்ப்பால் குடித்து முடித்த உடன் குழந்தை முதுகைத் தட்டி ஏப்பம் விட செய்வது அவசியம்
 • பால் குடிப்பதில் குழந்தைக்கு சிக்கல் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்
 • ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை வரை பால் கொடுங்கள்
 • பிரசவ கால உடல் எடையைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு ஆரோக்கியமான உணவுகளைத் தயங்காமல் சாப்பிடுங்கள்.

தேவையான உணவு, தேவையான நீர், தேவையான உறக்கம் உங்களுக்கு இந்த தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக் கொள்வது இந்த நேரங்களில் உங்கள் குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். தாய்ப்பால் கொடுக்கும் நேரங்களில் உங்களுக்கும் குழந்தைக்குமான பந்தங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெகு சீக்கிரம் அவள் வளர்ந்து விடுவாள் அதனால் உங்கள் தாய்ப்பாலூட்டும் தருணங்களும் காணாமல் போய் விடும். ஆகவே அன்போடும் அமைதியோடும் இந்த உணவூட்டும் வேலையை செய்யுங்கள்.

Was this information helpful?
thumbsupthumbsdown
The following two tabs change content below.

  LATEST ARTICLES