கர்ப்பிணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 15 குறிப்புகள்

Pregnancy tips web

Image: Shutterstock

கர்ப்ப காலங்களில் சொல்லப்படும் எல்லாவிதமான அறிவுரைகளையும் குறிப்புகளையும் அப்படியே பின்பற்ற எல்லோராலும் முடியாது. ஏன் யாராலுமே முடியாது. காரணம் அனுபவ அறிவினால் நமக்கு பெரியவர்கள் தரும் குறிப்புகள், நமது உடல் வாகிற்கு ஏற்ப மருத்துவர்கள் குறிப்புகள், சக தோழிகளின் அனுபவக் குறிப்புகள் மற்றும் ஆங்காங்கே தென்படும் கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள் என ஒவ்வொன்றையும் பின்பற்ற எல்லோராலும் முடியாது தான் இல்லையா.

அவர்களுக்காகவே இந்த செக் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வரப் போகிற பரீட்சைக்கு எந்தெந்த கேள்விகள் முக்கியமாக வரலாம் என ஒரு முன் தீர்மானம் ஆசிரியர்கள் மூலம் நமக்கு பகிரப்படுவது போலவே வரப்போகிற பிரசவ நேரத்தை சுலபமாகக் கடக்கவும் ஆரோக்கியமான முறையில் பிரசவத்தை எதிர்கொள்ளவும் இந்தப் பதினைந்து குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் பிரசவ பரிட்சையில் 80 சதவிகிதம் நீங்கள் பாஸ் மார்க் பெற வாய்ப்பிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

1. கர்ப்பமும் ஆரோக்கியமும்

நீங்கள் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் தவிர்த்து தான் ஆக வேண்டும். தாய்மை அடைதல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காக பெண்களை இயற்கை தேர்ந்தெடுத்திருக்கிறது பெண்களுக்கான ஆசிர்வாதம். ஆகவே அந்த நேரங்களில் நீங்கள் புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது புகைபிடிப்பவர் அருகே இருத்தல் போன்ற எந்த ஆரோக்கிய கேடான விஷயங்களிலும் ஈடுபடக்கூடாது (1).

2. கர்ப்பமடையும் முன்னரே விட்டமின் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்

தாய்மை அடைய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்த பின்னர் அல்லது அதற்கான பருவமும் சூழ்நிலையும் வந்த பின்னரே நீங்கள் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்களுக்குத் தேவையான விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கருவில் உருவாகும்போதே உங்கள் குழந்தை ஆரோக்கியமான கருவாக உருவாகும் தன்மை ஏற்படும் (2). ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மாத்திரைகள், கேல்சியம் மாத்திரைகள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவில் வளர ஆரம்பிக்கும்போதே உங்கள் குழந்தையின் நரம்பு , முதுகெலும்பு போன்றவை நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகும் தன்மை ஏற்படும்.

3. அதிகளவு நீர் அருந்த வேண்டும்

கர்ப்ப காலங்களில் உங்களிடம் இருக்கும் ரத்தம் தான் உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜென் மற்றும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது (3). ஆகவே சாதாரண நேரங்களை விட கர்ப்பமான நேரத்தில் உங்கள் ரத்தம் அதன் அடர்த்தியில் 50 சதவிகிதம் அதிகமாக வேலை செய்ய வேண்டி வருகிறது. அதனால் தான் கர்ப்பமான நேரங்களில் அதிகளவு நீர் அருந்த வேண்டியது அவசியம் என்கிறோம். ஒரு நாளைக்கு 8 முதல் 10 க்ளாஸ் அளவில் நீர் அருந்துதல் உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்தை உறுதி செய்யும். மேலும் மலசிக்கல் , மயக்கம், வாந்தி போன்றவைகளால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடுகளைப் போக்கவும் நீங்கள் நீர் அருந்த வேண்டியது அவசியமாகிறது.

4. உடல் நச்சுக்களை நீக்க வேண்டும்

கர்ப்பம் ஏற்படுவதற்கு முன்னேற்பாடாக உடலில் நச்சுத்தன்மை இருந்தால் அதனை அகற்றுவதும் மேலும் கர்ப்பம் அடைந்த பின்னர் உடலில் நச்சுத்தன்மை சேராமல் இருக்கவும் புகையிலை, புகைபிடித்தல் , மது அருந்துதல் போன்ற விஷயங்களை நீங்கள் விட்டு விட வேண்டும் (4). நெயில் பாலிஷ் ரிமூவரின் வாசனை கூட கருவில் உள்ள குழந்தையை பாதிக்கலாம். ஏனெனில் இவற்றை பயன்படுத்துவதால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி , பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவு போன்றவை ஏற்படலாம் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது (5).

5. அன்றாட வேலைகளில் மாற்றம் இருக்கட்டும்

கர்ப்பம் உருவான பின்னர் நீங்கள் அன்றாடம் தொடர்ந்து செய்து வரும் உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். குளியலறை சுத்தம் செய்வது, வளர்ப்பு மிருகங்களில் முக்கியமாக பூனையின் கழிவுகளை சுத்தம் செய்வது , பளு அதிகமான பொருள்களை கையாளுவது, கிருமிகளுடன் நேரடி தொடர்பான விஷயங்கள் போன்றவற்றை நீங்கள் செய்யக் கூடாது (6). இது வயிற்றில் வளரும் உங்கள் குழந்தையைப் பாதிக்கும். ஏணி , மாடிப்படிகள் போன்றவற்றில் ஏறாமல் இருக்க வேண்டும். அமிலத்தன்மை அதிகம் நிறைந்த ப்ளீச்சிங் பவுடர் மாதிரியான ரசாயனங்களுடன் நீங்கள் அதிகம் புழங்க வேண்டாம் (7). அடுப்பின் அருகே அதிக நேரம் நிற்பதை தவிருங்கள்.

6. உங்கள் மாத்திரைகளை சரிபாருங்கள்

கர்ப்பம் அடைந்த பின்னர் தலைவலி, காய்ச்சல் போன்ற எந்தவிதமான உடல் உபாதைகள் இருந்தாலும் மருத்துவரின் அனுமதி இல்லாமல் எந்த மருந்தும் சாப்பிடக் கூடாது. உங்கள் மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியுடன் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது ஆகும். காய்ச்சலுக்கு க்ரோசின், இருமலுக்கு சிரப் என வழக்கமான எந்த ஒரு மருந்தையும் நீங்கள் தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது (8). அல்லது இயற்கை தீர்வு என எந்த மூலிகை வைத்தியதையும் நீங்களாகவே பின்பற்ற கூடாது. காரணம் உங்களுக்குள் வளரும் உயிரானது மிக மிக மென்மையானது. அதனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கே நீங்கள் உள்ளே சாப்பிடும் எதுவாக இருந்தாலும் இருக்க வேண்டும்.

7. உடல் எடையை பரிசோதியுங்கள்

கர்ப்பமடைந்த சமயங்களில் நீங்கள் இரண்டு பேருக்கான உணவை உட்கொள்ள வேண்டி வருகிறது.இதனால் உங்கள் உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் அதற்காக அதிகமான எடை உங்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். காரணம் உங்கள் எடையானது பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் குறைய வாய்ப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உடல் எடையைக் கவனத்தில் கொண்டு சாப்பிடாமல் இருந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே உடல் எடையானது மாதா மாதம் குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும் (9). கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் மாதம் 1 கிலோ வரை அதிகரிக்கலாம்.

8. ஊட்டச்சத்து மிக்க உணவு

ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் நீர் அருந்துவதைப் போலவே உங்களுடைய உணவுப் பழக்கமும் ஒரு நாளைக்கு 4 முதல் ஐந்து வரை அதிகரிக்கலாம். அல்லது ஆறு வேளை வரை கூட நீளலாம். தவறே இல்லை. ஆனால் உங்கள் உணவில் ஊட்டச்சத்து இருப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். குழந்தையின் முதுகெலும்பு மற்றும் நரம்புகளுக்கு இந்த ஊட்டச்சத்து மிக்க உணவு மிகத் தேவையானது (10). மேலும் உங்கள் ரத்தம் சுத்திகரிப்பு அடையவும் உடலில் தேவையான ரத்தம் ஊறவும் ஊட்டச்சத்து மிக்க உணவாக நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டி வரும்.

9. பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்

கர்ப்ப நேரத்தில் நீங்கள் நிறைய விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டி வரலாம். உங்கள் டீ , காபி பழக்கங்கள் கூட குறைக்கப்பட வேண்டி வரலாம். காரணம் அது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தீங்கான பலனைத் தரலாம். எனவே அதற்குப்பதிலாக நீங்கள் பழ வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். அப்படி உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது (11). கூடவே குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்களில் இருக்கும் சர்க்கரைத் தன்மை நாள் முழுதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது.

10. மீன் உணவுகளை அதிகம் உண்ணலாம்

2007ல் நடந்த ஒரு ஆய்வில் 12000 குழந்தைகளுக்கு மேல் அதிக அளவு நுண்ணறிவு பெற்றவர்களாக இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. காரணம் இந்தக் குழந்தைகளின் தாய்மார்கள் இவர்களை வயிற்றில் சுமந்த போது அதிக மீன் உணவுகளை சாப்பிட்டதுதான் என்கிறார்கள். மீனில் உள்ள ஒமேகா 3 குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு வாரத்திற்கு 12 அவுன்ஸ் வரை மீன் சாப்பிடலாம் (12). ஆனாலும் எந்த வகை மீன்களை சாப்பிட வேண்டும் என அறிந்து அவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். இது மிகவும் முக்கியம். மருத்துவரின் உதவியுடன் நீங்கள் சாப்பிட வேண்டிய மீனின் வகைகளை தெரிந்து அவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.

11. சுத்தமாக இருங்கள்

உங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது இந்த கர்ப்ப காலத்தில் ரொம்பவே அவசியமான ஒன்றாகிறது. இந்த கொரோனா காலத்தில் வெளி உலகம் எவ்வளவு தன்னை தூய்மைப்படுத்திக் கொள்ள மெனக்கெடுகிறது என்பதைக் கண்கூடாகவே அறிந்திருப்பீர்கள். ஆகவே நீங்கள் அடிக்கடி கை கழுவுதல் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது (13). ஒருவரிடம் இருந்து உங்களுக்குக் கிருமிகள் பரவாமல் தவிர்க்க சானிடைசர்கள் நல்ல தேர்வாக இருக்க முடியும்.

12. பயணத்தை திட்டமிடுங்கள்

நீங்கள் கர்ப்பம் அடைந்த நேரங்களில் முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது குழந்தைக்கு நன்மை தரும். முக்கியமாக கர்ப்பம் அடைந்த முதல் மூன்று வாரங்களில் பயணத்தை தவிர்ப்பதே சிறந்தது. இதனால் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் போன்ற மருத்துவ சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் மருத்துவர் அனுமதித்தால் மட்டுமே பயணிக்கலாம் (14). காரில் பயணிப்பதாக இருந்தால் பாதுகாப்பு நாடாவினை அணிந்து கொள்வது இந்தியச் சாலைகளில் உள்ள குண்டுகள் மற்றும் குழிகளில் இறங்கி வண்டி குலுங்கும் போது ஏற்படும் அதிர்வுகளின் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

13. மசக்கையை அனுபவியுங்கள்

உண்மையைச் சொல்வதென்றால் இப்போது வரை கருவுற்ற பெண்கள் புளிப்பான மாங்காய் முதல் சாம்பல் வரை ஏன் சாப்பிடுகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஆனாலும் உங்கள் உடல் ஏதோ ஒரு விதத்தில் தனக்குத் தேவையானதை உட்கொண்டு சமன் செய்ய முயற்சிக்கிறது (15). அதனால் ஆசைப்பட்ட அனைத்தையும் உங்கள் உடல் கேட்கும் அனைத்தையும் நீங்கள் சாப்பிட்டு விடுங்கள். அதனால் தவறேதும் நேராது. ஆனால் அளவுகளில் கவனமாக இருங்கள். அது மிக முக்கியம்.

14. மகப்பேறும் அதற்குப்பின்பான மனச் சோர்வும்

மனச்சோர்வு இந்த வார்த்தையை நீங்கள் அதிகமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உங்களுக்குத் தெரியாத ஒன்று என்ன என்றால் 10 முதல் 20 சதவிகித பெண்கள் அவர்களின் மகப்பேறு சமயத்தில் அதிக அளவில் மனசோர்வு மன அழுத்தம் போன்றவற்றை அனுபவிக்கிறார்கள் (16). இது அதிகரித்தால் உங்களுக்கு பிரசவ நேரங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆகவே முன்னெப்போதையும் விட மனநிலை மாற்றங்கள் அதிகமாக இருந்தால் அதற்கான தெரபி எடுத்துக் கொள்வது நிச்சயம் உதவியாக இருக்கும்.

15. எப்போது மருத்துவரை அழைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்

கருவுற்ற பின்னர் 8 மாதங்கள் முடிவடைந்த நிலையில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரசவிக்கலாம் என்பதால் உங்கள் மருத்துவரை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிஜ வலி எது அல்லது பொய் வலி எது என்பதில் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கலாம். எந்த விதமான வலி இருந்தாலும் நீங்கள் மருத்துவரை அழையுங்கள். வலிமையான நரம்பு பிடிப்புகள் இருந்தால் உங்கள் மருத்துவரை நீங்கள் அழைக்கலாம். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடுப்பு வலி இருந்தால் நீங்கள் அவசியம் மருத்துவமனை செல்லுங்கள். பிறப்புறுப்பில் ரத்த கசிவு அல்லது நீர்க்கசிவு இருந்தாலும் மருத்துவரை அழைக்கலாம். நடக்க முடியாமல் இருத்தல், மயக்கம், படபடப்பு, வாந்தி போன்றவை இருந்தாலும் நீங்கள் மருத்துவரை உடனே நாட வேண்டும். வயிற்றில் குழந்தையின் செயல்பாடுகளில் தேக்கம் இருந்தால் நிச்சயம் நீங்கள் மருத்துவரை அழையுங்கள் அல்லது மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

References: