தமிழில் சிறந்த நாவல்கள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

Image: Shutterstock

நாவல்கள் என்றாலே இலக்கிய வாசிப்பாளர்களுக்கு மிக பெரும் போதையான ஒரு விஷயம். ஒரு கதைக்குள் புகுந்து அதனுள் வாழ்ந்து அதிலிருந்து விடுபட்ட பின்னும் அந்த கதாபாத்திரத்தின் தன்மைகளோடு சில நாட்கள் வாழ்வது என நாவல் வாசிப்பாளர்களின் உலகமானது தனித்துவமானது.

அப்படியான நாவல்களில் சில குறிப்பிட்ட நாவல்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். படித்து அனுபவியுங்கள். பலருடன் பகிருங்கள்.

1. அம்மா வந்தாள்

அம்மா வந்தாள் நாவல் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியத்துவம் பெற்ற எழுத்தாளர் தி. ஜானகிராமன் தமிழுக்கு தந்த மிக அற்புதமான பொக்கிஷம். இது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது இதன் அடுத்த சிறப்பம்சம்.

உறவுகளின் உணர்ச்சி பிழம்பான நேரங்களை இந்தக் கதையின் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அனைவரும் கையெடுத்து வணங்கும் தாய்மை பற்றிய முற்றிலும் வேறோரு பரிமாணத்தை இந்தக் கதையில் நீங்கள் தரிசிக்க முடியும். ஒவ்வொரு வாசகரின் வீட்டிலும் இருக்க வேண்டிய படைப்பு இந்த நாவல்.

2. ஒரு புளிய மரத்தின் கதை

தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. தற்கால எழுத்தாளர்களில் திரு. ஜெயமோகன் அவர்களின் ஆதர்ஷ எழுத்தாளர்களுள் இவர் மிக முக்கியமானவர். இந்த புளிய மரத்தின் கதை எனும் நாவல் ஒரு ஊரில் இருக்கும் ஓங்கி வளர்ந்த புளிய மரத்தின் அடியில் நடக்கும் பல மனித அரசியல்களை பல அதிகார சண்டைகள் பற்றி இக்கதை விளக்குகிறது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியைப் போலவே வாழ்ந்து அழிந்த ஒரு மரத்தின் கதை இது. இந்த நாவலும் அனைத்து வாசகர் வீட்டிலும் அவசியம் இருந்தாக வேண்டிய ஒன்றுதான்.

3. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு

இந்த நாவல்களுக்கு அறிமுகம் தேவையா என்ன. பெயரை கேட்ட உடனே வாங்கி படித்தாக வேண்டிய பொறுப்பை நமக்கு அளிக்கும் நாவல்கள். அமரர் கல்கியின் அற்புதமான வரலாற்று படைப்புகள். பொன்னியின் செல்வன் இப்போது ஒருவழியாக திரைப்படம் ஆக்கப்பட்டு வருகிறது. கடும் முயற்சிக்கு பின்னர் இயக்குனர் மணிரத்னம் இதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். இது நமது பூர்வாசிரம கதைகளை வரலாற்று நிகழ்வுகளை புனைந்து கூறப்பட்டது என்றாலும் நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறியவும் அதில் ஆச்சர்யப்பட்டு போகவும் ஆயிரம் விஷயங்கள் இந்த நாவல்களில் கொட்டி கிடக்கின்றன.

4. மாதொரு பாகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனை இந்த நாவல் எழுதுவதற்கு முன்னர் இந்த உலகிற்கு அல்லது இலக்கிய உலகிற்கு அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் இந்தக் கதையின் கரு ஒரு குறிப்பிட்ட சாதியை அவமானப்படுத்துவதாக கூறி பல எதிர்ப்புகள் எழுந்த போதுதான் யார் இந்த பெருமாள் முருகன் ? எதிர்ப்பதற்கு அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாவலில் என்று மக்கள் வாங்கி படித்த நாவல் தான் மாதொருபாகன். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர அவதாரத்தின் அடையாளமாக இருக்கும் ஊர். அங்கிருக்கும் ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லை. அதனை ஒட்டி நடக்கும் பல உணர்வு சிக்கல்களை, ரகசிய தீர்வுகளை எழுத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். சமூகத்தின் ரகசிய போக்குகளை வெளிப்படுத்தி இருக்கும் இந்நாவலில் மொழியாடல் அற்புதமாக இருக்கிறது.

5. வெக்கை

இந்த நாவல் அசுரன் என்கிற பெயரில் படமாக்கப்பட்ட போதுதான் பெரும்பாலானவர் கைகளில் சென்று சேர்ந்தது என்று சொல்லலாம். எழுத்தாளர் பூமணி தான் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஒரு நாவல் திரைக்கதையாக மாறும்போது ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. தனது நாவலில் இல்லாதவைகளை சினிமாவில் சந்திக்கும்போது எழுத்தாளருக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுவது இயல்புதான். ஏனெனில் இயக்குனர் வெற்றிமாறனே இதனை கூறி இருக்கிறார். நாவல் படித்து விட்டு படம் பார்த்தால் அது யாருக்கும் பிடிக்காது என்று. அடக்குமுறை செய்யப்பட்டவர்களின் மனக்குமுறல்களின் மொத்த வடிவம் இந்நாவல்.

6. புயலிலே ஒரு தோணி

எழுத்தாளர் ப. சிங்காரத்தின் பல்வேறு ஆக்கங்களில் ஒன்று. ஏற்கனவே இருக்கின்ற , உருவாக்கப்பட்ட மதிப்பீடுகளை ஆங்காங்கே கிண்டல் செய்து துவம்சம் செய்வது இந்த எழுத்தாளருக்கு கை வந்த கலையாக இருக்கிறது. டிஸ்கவரி புக் பேலஸ் இதனை வெளியீடு செய்திருக்கிறது. கிண்டில் வடிவத்திலும் கிடைக்கிறது.

7. ரூஹ்

யுவ புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் எழுதிய மற்றுமொரு நாவல் ரூஹ். தான் மிகவும் மனசோர்வு அடைந்திருந்த தருணங்களை கோர்த்து அழகிய கதையாக மாற்றியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பல வித மன அழுத்தங்களுக்கு மத்தியில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய காவிய தலைவன் திரைப்படத்திற்காக சென்ற அமீர் பீன் தர்காவும் அங்கே நடந்த சில அற்புதங்களும் அவரது கவலைகளை கரைய செய்தன என்கிறார் எழுத்தாளர்.

8. வார்த்தை தவறி விட்டாய்

எழுத்தாளர் மதுராவில் கைவண்ணத்தில் இந்த நாவல் உருவாகி இருக்கிறது. இந்த நாவல் திருமணத்திற்கு பின்பான தனி மனித நேர்மையை பேசுகிறது என்பது இதில் சத்தியம் எனும் வார்த்தை பற்றிய விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. காப்பாற்ற முடியாத பலவீனமான மனதுடையவர்கள் தரும் தவறான வாக்குகள் அடுத்த தலைமுறையின் மனதை எப்படி சிதைக்கிறது என்பது கதை.

9. நீ தந்த மாங்கல்யம்

எழுத்தாளர் பத்மா கிரகதுரை இந்த நாவலை எழுதி இருக்கிறார். பால்ய கால நட்பினை தொலைத்த தோழர்கள் ஒரு திருமணத்தில் சந்திப்பதும் அங்கிருந்து ஒரு காதல் ஆரம்பிப்பதும் என காதலை பிழிந்திருக்கிற கதையாக இருக்கிறது. காதலர்கள் படிக்கலாம்.

10. வழியோரம் விழி வைக்கிறேன்

எழுத்தாளர் ரம்யா ராஜன் எழுதிய இந்த நாவல் வழக்கமான காதலை மையமாக கொண்ட கதைதான். இவர் 10க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி அவைகளை கிண்டில் வடிவத்தில் வெளியிட்டு இருக்கிறார். பெரும்பாலானவை காதலை சார்ந்ததாகவே இருக்கிறது. எல்லாமுமே சிறந்த காதல் பாடலின் வரிகளை தலைப்பாக கொண்டிருக்கிறது என்பது இவரது நாவல்களின் மற்றொரு சிறப்பம்சம்.

The following two tabs change content below.

    LATEST ARTICLES