குழந்தைகளுக்கு கொடுக்க என்ன வகையான வாழைப்பழங்கள் சிறந்தது ? எப்போது தரலாம் எப்படி தரலாம்?

Image: Shutterstock

IN THIS ARTICLE

பொதுவாக பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடல் எடையை பற்றி அதிகம் கவலை கொள்வார்கள். குழந்தைக்கு சத்தான ஆகாரங்கள் தருவதன் மூலமே குழந்தையின் ஆரோக்கியம் பேணப்படுகிறது.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பழங்கள் உகந்தது. அவர்களின் மென்மையான வயிறு இவற்றை சுலபமாக எளிதாக ஜீரணம் செய்து விடும். அதிலும் முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழங்கள் அவர்களின் உடல் எடை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.

இருப்பினும் குழந்தைகளுக்கு எப்போது வாழைப்பழங்களை உணவாகக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் பலவிதமான குழப்பங்கள் தாய்மார்களுக்கு இருக்கலாம். அவற்றை தீர்த்து வைக்கவே இந்த கட்டுரை.

குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை எப்போதில் இருந்து கொடுக்கலாம் ?

குழந்தைகள் தங்கள் அன்னையின் தாய்ப்பாலையே தங்கள் உணவாக பெரிதும் நம்பி இருக்கின்றன. இருப்பினும் ஐந்து மாதங்களுக்கு பிறகு தாய்ப்பால் சுரக்கும் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும் போது அவற்றை சமப்படுத்த இணை உணவுகள் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்தில் குழந்தையின் மென்மையான வயிறு திட உணவை செரிக்கும் தன்மையை பெற்றிருக்கும். இந்த நேரங்களில் அவர்கள் உண்ணும் உணவுகளின் ருசியே இறுதி வரை அவர்களின் சுவை மொட்டுகளில் ஆழமாக பதியும். அவற்றின் சுவையை அவர்கள் வளர வளர விரும்புவார்கள்.

வாழைப்பழம் தரும் ஊட்டச்சத்துக்கள்

பொதுவில் வாழைப்பழங்கள் இரும்புச்சத்து ,நார்ச்சத்து, கொழுப்பு, புரதம் , சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, பி1,2, சி, பொட்டாசியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்கள் உண்டு. மேலும் வாழைப்பழத்தின் கலோரிகள் 100க்கும் மேலாகும். உடனடி ஆற்றல் தரும் இந்த பழம் குழந்தைகளை ஆக்டிவாக வைக்கிறது.

என்ன வகை வாழைப்பழங்கள் உங்கள் குழந்தைக்கு நன்மை தரும் ?

Image: Shutterstock

வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கான சிறந்த முதல் உணவாகும். அதன் மென்மையான அமைப்பு குழந்தைகள் மென்று விழுங்குவதை எளிதாக்குகிறது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அவர்களின் மென்மையான வயிறு ஜீரணிக்க எளிதானது மற்றும் குழந்தைகளின் மலச்சிக்கலைத் தவிர்க்கிறது. வாழைப்பழத்தின் ஊட்டச்சத்துக்கள் அவை உங்கள் குழந்தைக்கான நல்ல தேர்வு எனலாம்.

எப்போதுமே குழந்தைகளுக்கு பழுத்த வாழைப்பழங்களை  மட்டுமே கொடுங்கள். பழுக்காத பழங்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் சில சமயங்களில் பழங்கள்  அழுகிப்போய் விடலாம். எனவே அதை அதிகமாக பழுக்க விட வேண்டாம். குழந்தைகளுக்கு வாழைப்பழ உணவளிக்கும் முன் அந்த பழத்தின் தரத்தை நீங்கள் சுவைக்கவும்.

விருப்பாச்சி அல்லது மலை வாழைப்பழங்கள்

விருப்பாச்சி அல்லது மலை வாழைப்பழங்கள் குழந்தைகளுக்கு தரக்கூடிய பழ வகைகளில் சிறந்த முதல் தேர்வாகும். இவற்றுள் கலப்பின வகை மற்றும் சிறிய வகை என இரண்டு வகை உள்ளது.  சிறியவை சுவையில் அற்புதமானவை என்றாலும் உங்கள் பகுதியில் கிடைக்காவிட்டால் அதற்கு மாற்றாக  கலப்பினத்தையும் தேர்வு செய்யலாம்.

நன்கு பழுத்த விருபாச்சி பழத்தில் தோல் கருப்பாக இருக்கும். ஆனால் உள்ளே இருக்கும் பழம் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை தோலுரித்து விதைப்பகுதிகளை நீக்கி நன்றாக கரண்டியால் மசித்து ஊட்டி விடலாம். குழந்தைக்கு நான்கு மாதங்களில் இருந்தே இதனை கொடுத்து பழக்கலாம்.

நேந்திரம் பழங்கள்

வாழைப்பழங்களின் ராஜா எனப்படும் நேந்திரம் பழங்கள் சமைக்கும்போது அதன் ஊட்டச்சத்து மற்றும் சுவை இரட்டிப்பாகும் என்பது கூடுதல் தகவல்.நேந்திரம் பழங்களில் புள்ளிகளில்லாத மஞ்சள் பழங்களை சமைக்க கூடாது. அங்கும் இங்கும் கறுப்பாகும் வரை 2 -3 நாட்கள் காத்திருக்கவும். அதன் பின் அவற்றை சமைக்கலாம்.

நேந்திரம் பழத்தை தோலோடு கழுவிய பின்னர் ஆவியில்வேக வைக்கவும். அதன் பின்னர் தோலை அகற்றி நீளமாக வெட்டலாம்.அதன் விதைகளை நீக்கி, அதை நன்றாக பிசைந்து குழந்தைக்கு ஊட்டலாம். குழந்தைக்கு  8-10 ஆண்டு வரை இந்த நீராவி முறையானது பரிந்துரைக்கப்படுகிறது

செவ்வாழைப்பழம்

செவ்வாழை எனப்படும் சிவப்பு வாழைப்பழங்களில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்கள் கொண்ட செவ்வாழைப்பழம் குழந்தைக்கு 1 வயதுக்கு பிறகு கொடுக்கலாம். அப்போதுதான் செரிமானம் ஆகும்.

செவ்வாழை ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்கக்கூடும் எனவே அதை அதிகமாக பழுக்க விட வேண்டாம். ஆங்காங்கே கரும்புள்ளிகள் இருப்பின் போதுமான அளவு பழுத்தது எனலாம். உங்கள் விரல்களால் தொட்டு உணரும் போது பழம் மென்மையாக இருக்க வேண்டும்.

செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிகோலுகிறது. இவற்றை வேக வைக்க கூடாது. அதே போல விதைகளை நீக்க வேண்டிய அவசியமும் இல்லை. சிறிது துண்டுகளாக வெட்டி வைத்தால் உங்கள் ஒரு வயது மழலை அவராகவே எடுத்து சுவைக்க தயாராகி விடுவார். இருப்பினும் அவற்றை மசித்து ஊட்டுவது நல்லது.

நாட்டு வாழைப்பழம் அல்லது பச்சை நாடான் பழம்

நாட்டு வாழைப்பழம் அல்லது பச்சை நாடான் பழம் என்பது அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இருந்தாலும் மற்ற வகை வாழைப்பழங்களுடன் ஒப்பிடும்போது இது சுலபமாக ஜீரணிப்பது இல்லை. ஒரு சிலர் ஒரு வயதில் இருந்து இதை குழந்தைகளுக்கு உணவளித்தாலும், சரியான செரிமானத்திற்கு நீங்கள் உங்கள் குழந்தைக்கு 2 வயது வரை காத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த வாழைப்பழத்தை  மாலை நேரங்களில் கொடுக்க வேண்டாம். இந்த வகை பச்சை நாடான் பழங்கள் கோடைகாலத்தில் முக்கியமாக கொடுக்கலாம்.  ஏனெனில் இது குளிர்ச்சி தன்மை தரக் கூடிய பழமாகும். கார்பன் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விட பச்சையாக வாங்கி உங்கள் அரிசி சாக்கில் போட்டு பழுக்க வைப்பது நன்மை தரும்.

குழந்தைகளுக்கு பழங்களை உணவாகக் கொடுக்கும்போதும் அல்லது மற்ற எந்த உணவைக் கொடுத்தாலும் அவர்கள் அமர்ந்த நிலையில் அவர்களுக்கு ஊட்டி விடுங்கள். படுக்க வைக்க கூடாது.

மேலே குறிப்பிட்டவை தவிர வாழைப்பழ வகைகளில் பூவன், கற்பூரவல்லி,பேயன், செவ்வாழை,இளக்கி, மலைவாழைபழம் ,மொந்தன் பழம் ரஸ்தாளி பழம், என்று பலவகைகள் உண்டு. இந்த வகைகளில்  ஒரு வயத்துக்குண்டான குழந்தைக்கு எல்லா வகையான வாழைப்பழமும் உணவாகக் கொடுக்கலாம்.பச்சை நாடான் வாழைப்பழத்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உணவை ஊட்ட வேண்டி வரலாம். அந்த நேரங்களில் நீங்கள் பழங்களை மசித்து மசித்து கொடுத்துக் கொண்டே இருந்தால் கிருமிகள் உண்டாகும் . அளவான பழத்தை எடுத்து சிறிது சிறிதாக எடுத்து மசித்து மசித்து கொடுக்கலாம்.

எவ்வளவு பழம் கொடுக்க வேண்டும்

Image: Shutterstock

ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைகளுக்கு பழ உணவை ஆரம்பிக்கும்போது முதலில் சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். அவர்கள் வயிறு பழகிய பின்னர் அளவை அதிகரிக்கலாம். கால் ஸ்பூன் பழத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். மெல்ல மெல்ல அரை ஸ்பூன் மற்றும் ஒரு ஸ்பூன் என மாற்றலாம். மூன்று ஸ்பூன் வரை அதிகரிக்கலாம். அதன் பின்னர் கால் பழம் அரை பழம் என ஊட்டலாம். தினமும் ஊட்டுவதாக இருந்தால் அரை பழம் போதுமானது.

ஒரு வயது வரை அவர்களுக்கு பாலுடன் தேன் போன்றவற்றை சேர்க்க வேண்டாம். அதற்கு பின்னர் சேர்க்கலாம். பழங்களில் இனிப்பு இருப்பதால் அதுவே போதுமானது. அதைப்போல குழந்தைகளுக்கு வயிறு சரியில்லை எனும்போது வாழைப்பழம் தருவதை தவிர்க்க வேண்டும்.

நேந்திரம் பழ பொடி தயாரிக்கும் முறைகள்

குழந்தைகளுக்கு நேந்திரம் பழம் பொடி கஞ்சி கொடுப்பதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அவற்றை எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையானவை

 • நேந்திரம் காய் 2
 • நல்லெண்ணெய் சிறிதளவு

செய்முறை

 • நல்லெண்ணையை கைகளின் விரல் இடுக்குகளில் நன்கு தடவிக் கொள்ளவும்.
 • கத்தியால் நேந்திரங்காயின் தோலை சீவவும்
 • அதன் பின்னர் பஜ்ஜிக்கு போடுவது போல சீவவும்
 • இந்த சிப்ஸ் போன்ற சீவல்களை வெண்மை துணியில் பரப்பி காய வைக்கவும்
 • நல்ல வெயிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ந்தால் போதுமானது.
 • நன்கு காய்ந்ததை எடுத்து மிக்சியில் அரைத்து பாத்திரத்தில் சேமிக்கவும்.
 • நேந்திரம் பொடி தயார்.

நேந்திரம் கஞ்சி செய்முறை

 • இந்தப் பொடியை ஹெல்த் மிக்ஸ் கரைப்பது போல ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து கட்டிகளில் இல்லாமல் கரைக்கவும்.
 • ஒரு ஸ்பூன் வெல்லம் அல்லது பனை வெல்லத்தை தனியாகக் கரைக்கவும்
 • கரைத்த நேந்திரம் பொடியை அடுப்பில் வைத்து மெதுவாக வேக விடவும். கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். பொடி வெந்தவுடன் பனைவெல்ல நீர் சேர்த்து கொதிக்க விடவும் அதன் பின்னர் சில துளிகள் நெய் ஊற்றி சிறிது கொதிக்க வைத்து ஆறிய பின்னர் குழந்தைக்கு ஊட்டவும்.

The following two tabs change content below.