
Image: Shutterstock
உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அமன் எனும் நான்கு வயது சிறுவனை அழைத்து சென்ற போது உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அமன் சேர்க்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
அமனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் பல அசாதாரண முடிவுகள் கொண்டவையாக இருந்தன. இந்தக் குளறுபடிகள் மருத்துவர்களை பயமுறுத்தின.
அமனுக்கு 99 டிகிரி செல்ஸியஸ் அளவில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தபடி இருந்தது. அதைத் தொடர்ந்து கண்களில் அரிப்பு இருந்தது. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர் வயிற்று வலி இருப்பதாக கூறியிருக்கிறான். இதைத் தவிர மீதம் எல்லாமே அவனுக்கு நார்மலாக இருந்தது என அமனின் அம்மா பூஜா கூறுகிறார் (covid-19 side effects in kids).
ஆனால் அமனின் தொற்று காரணமாக அவனது இதயத்தின் ஒரு பக்கம் வீங்கி உள்ளதாக மருத்துவர்கள் அமனின் தந்தையான சூரஜிடம் கூறிய போது அவர் அதிர்ந்து போயிருக்கிறார். அமனுக்கு எம்ஐஎஸ் – சி (MIS-C) என்கிற பிரச்னை உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுக்கு உண்டாகும் ‘மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம்’ அல்லது எம்.ஐ.எஸ் – சி என்பது இப்போது கோவிட் -19 உடன் தொடர்புடைய ஒரு தீவிர நோய் என்கிறது உலகின் பிரபலமான மருத்துவ பத்திரிகைகளில் ஒன்றான ‘தி லேன்செட்’ .
அமன் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியராக பணியாற்றும் சூரஜின் குடும்பத்தினர் அனைவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். மே இரண்டாவது வாரத்தில், சூரஜ் குடும்பத்தினர் தங்களது சிகிச்சைக்குப் பின்னர் தனிமைப்படுத்துதலில் இருந்து மீண்டனர். கொரோனா நோய் தொற்றின் போது குடும்பத்தில் உள்ளவர்களை போல இல்லாமல், அமனுக்கு கண்னில் மட்டும் தொற்று ஏற்பட்டது . அதைத் தவிர வேறு தீவிர அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை.
Image: IStock
சிறுவன் அமன் ஆர்டி-பி.சி.ஆர் அறிக்கை நெகட்டிவ் என வந்தாலும் ஆன்டிபாடி சோதனையில், கணிசமான அளவிற்கு கோவிட் ஆன்டிபாடிகள் அமனின் உடலில் இருப்பது கண்டறியப்பட்டது (corona gives dangerous side effects in kids).
மேலும் அமனின் ஈ.சி.ஜி முடிவுகள் மிகவும் ஆபத்தான நிலையை சுட்டிக் காட்டின. உடனடியாக எடுக்கப்பட்ட எக்கோ கார்டியோக்ராம் (இதய பரிசோதனை) அறிக்கையும் நல்ல பதிலைத் தரவில்லை.உடல் சார்ந்த மற்ற பல விஷயங்கள் சரியாக இல்லை. இந்த சிறுவனுக்கு இந்த 4 வயதில் திடீரென்று இப்படி உடல் நலம் மாறியது அசாதாரணம் என்கிறார் அமனுக்கு சிகிச்சை அளித்த குழந்தைகள் நல மருத்துவர் அஜித்.
அதிகரிக்கும் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த நேரத்தில் குழந்தைகளுக்கான இந்த எம்ஐஎஸ் – சி (MIS-C) அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு உண்டான பிறகு இது ஏற்படுகிறது. ஆனாலும் இது மிகவும் அரிதானது என்பதால் அதிகம் பயப்பட வேண்டாம்.
இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கான இந்த எம்ஐஎஸ் – சி (MIS-C) நோயும் அதிகரித்திருப்பதாக குழந்தை மருத்துவர் அஜித் கூறியிருக்கிறார். இந்த மருத்துவரின் மருத்துவமனையில் ஆறு எமெர்ஜென்சி படுக்கைகள் உள்ளதாகவும் அந்த ஆறிலும் எம்ஐஎஸ் – சி (MIS-C) நோய் தாக்கிய குழந்தைகள் அட்மிட் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் எம்ஐஎஸ் – சி (MIS-C) நோய் தாக்கப்பட்டதாக 200 கேஸ்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எம்ஐஎஸ் – சி (MIS-C) நோய் பாதிப்பு கண்டறியப்படுவதாக செய்தி நிறுவனம் ANI கூறுகிறது. இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக் இன்டென்சிவ் கேர் அமைப்பு மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் 4 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை பாதிப்புக்கு உள்ளாக்குவதாகத் தெரிவித்திருக்கிறது. கொரோனா தாக்கிய பிறகு இந்த நோய் உருவாவதாகவும் சமயங்களில் இதனை ஆறு மாதக் குழந்தையிடம் கூட காண முடிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்ஐஎஸ் – சி நோய் தாக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது ?
Image: IStock
அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம், கடந்த வருடம் மே மாதம் முதல் இந்த நோய் பற்றி ஆய்வு செய்கிறது. எம்ஐஎஸ்-சி நோய் என்பது மிக அரிதான ஆனால் அதே நேரம் அதிக ஆபத்தான நோயாகும். கொரோனா உடன் தொடர்புடையது என சி.டி.சி தெரிவிக்கிறது.
எம்ஐஎஸ் – சி நோய் குழந்தைகளின் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், குடல், மூளை மற்றும் கண்களை குறிவைப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. அதன் அறிகுறிகளாக குழந்தைகளுக்கு கழுத்து வலி, அலர்ஜி , கொப்பளங்கள் , கண்கள் சிவத்தல் மற்றும் சோர்வாக இருத்தல் போன்றவை இதன் அடையாளங்களாக இருக்கலாம் என இந்த அமைப்பினர் கூறுகின்றனர். இருப்பினும் எல்லா குழந்தைகளுக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படுவதில்லை என்பதையும் கவனம் கொள்ள சொல்கிறது. 2025 ஜூன் முதல் இந்த நோய் தாக்கம் அமெரிக்காவில் பதிவாகி இருக்கிறது MIS-C in kids in tamil.
இதற்கான மருத்துவம் என்ன ?
Image: IStock
இந்த நோய்க்கு மருத்துவமனை காலம் என்பது 7 முதல் எட்டு நாட்கள் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த எம்ஐஎஸ் – சி நோய் தாக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் காய்ச்சல் இருந்தது. 73% குழந்தைகள் வயிற்று வலியாலும் 68% குழந்தைகள் வாந்தியாலும் அவதிப்பட்டனர் என்று உலகப் புகழ் பெற்ற மருத்துவ இதழ் லேன்செட் தெரிவித்தது.
பிரிட்டனின் புகழ் பெற்ற மருத்துவ பத்திரிகை தி பி.எம்.ஜே.கண்களின் கன்ஜங்டிவைட்டிஸையும் MIS-C இன் முக்கிய அறிகுறியாக இருக்கலாம் என்கிறது. கவஸாகி நோய் போன்றே இருந்தாலும் எம்ஐஎஸ்-சி வேறானது. இதயம் மற்றும் குடல்கள் பாதிக்கப்படுவதால் கவஸாகி நோயில் இருந்து இது வேறுபடுகிறது.
சிறிய அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் எம் ஐ எஸ் – சி நோய் கவனிக்கப்படாமல் போகும்போது அதிக பாதிப்புகளை விரைவாக ஏற்படுத்துகின்றன. உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவைகள் இயங்குவதை நிறுத்தலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
எம் ஐ எஸ் – சி ஏன் குழந்தைகளை குறி வைக்கிறது ?
Image: IStock
இதற்கான ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் இதற்கான மூல காரணம் கொரோனா வைரஸ் பாதித்தல் அல்லது பாதிப்படைந்தவர்களுடன் தொடர்பு கொள்தல் என்பது தான் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ‘இன்ட்ராவீனஸ் இம்யூனோகுளோபுலின்’ மற்றும் ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் குழந்தைகளுக்கு இந்த மருந்து எவ்விதம் பலன் அளிக்கும் சாதகமான விளைவுகள் கொடுக்கும் என்பது பற்றிய முழுமையான தெளிவு யாருக்கும் இல்லை என்கிறது தி பி.எம்.ஜே. அறிகுறிகள் கண்ட உடனேயே சிகிச்சை எடுப்பது மட்டுமே இதற்கான முதல் கட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்க முடியும்.
சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் இப்போது அமன் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கிறான். சரியான சூழல் இல்லை என்றால் ரத்த உறைவு உள்ளிட்ட சிக்கல்களை அமன் எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும்.
எனவே உங்கள் குழந்தைகளை கொரோனாவிடம் இருந்தும் எம் ஐ எஸ் -சி நோயிடம் இருந்தும் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள். முடிந்தவரை இளம் பிள்ளைகளின் பெற்றோர்கள் அலட்சியமாக இல்லாமல் பொறுப்புடன் நடக்கவும். வெளியே செல்வதை மற்றவருடன் பழகுவதை சில காலங்கள் உங்கள் குழந்தையின் நலனுக்காக தவிர்க்க வேண்டும்.
குடும்ப நலன் கருதி அமன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அவசியமான தகவலை மக்களுக்கு பகிர்ந்த பிபிசி தளத்திற்கு எங்கள் நன்றிகள். இந்த கட்டுரைக்கான மூலம் மற்றும் விபரங்கள் bbc மூலம் எடுக்கப்பட்டது.

Community Experiences
Join the conversation and become a part of our nurturing community! Share your stories, experiences, and insights to connect with fellow parents.

















