உங்கள் செல்ல பிஞ்சின் சருமத்திற்கு ரசாயனங்கள் அற்ற குளியல் பொடி தான் தேவை - ஏன் தெரியுமா ?

Image: Shutterstock

IN THIS ARTICLE

ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் உலகத்தில் உள்ள எல்லா கவலைகளையையும் சேர்த்தெடுத்து அம்மாவும் அப்பாவும் சுமக்கின்றனர். பெரும்பாலும் இதனை பாட்டி தாத்தாக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் இப்போதைய அணு அளவிலான குடும்பத்தில் அப்பா அம்மாவிற்குத்தான் அதிக அளவு பொறுப்புகள் உள்ளன.

பெரும்பாலும் குழந்தை பிறந்த உடன் பரிசு பொருள்களாக குழந்தைக்கான சோப் ஷாம்பு போன்றவைகளை தருவார்கள். இருப்பினும் குழந்தை சோப்பாக இருந்தாலும் அதில் ஆபத்து விளைவிக்கும் ஏழு விதமான கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன.

அதிக வாசனை (Fragrance), டாக் (talc). டயாக்ஸேன் (1,4-dioxane),ப்ரொப்லீன் கிளைகால் (Propylene glycol), மினரல் எண்ணெய் (mineral oil),ட்ரைக்ளோசன் (triclosan), பாராபென் (Paraben)போன்ற கெமிக்கல்கள் பல குழந்தை சோப்களில் இருக்கின்றன. இவற்றின் கெடுபலன்களை நீங்கள் கூகிள் செய்வதன் மூலம் விரிவாக அறியலாம். பேபி வைப்ஸ் களிலும் இதன் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

எனவே உங்கள் பிஞ்சுக்குழந்தையின் பட்டுபோன்ற சருமம் பிரகாசிக்கவும் தூய்மையடையவும் நீங்களே சொந்தமாக குளியல் பொடி ஒன்றைத் தயாரிப்பதே சாலச் சிறந்தது. இரண்டு வகையான குளியல் பொடிகளை உங்களுக்கு நான்  சொல்லித் தருகிறேன். வெகு சுலபமான ஒன்றுதான். உங்கள் அழகிற்காக நீங்கள் இயற்கை முறை பேக் போன்றவைகளைத் தயாரிக்கிறீர்கள் அல்லவா ! அதைப் போன்றே இந்த குளியல் பொடியும் மிக எளிமையான முறையில் தயாரித்து விடலாம்.

குளியல் பொடி 1

தேவையான பொருள்கள்

 • பச்சைப்பயிறு 1/2கிலோ
 • கடலைப்பருப்பு 1/2கிலோ
 • கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
 • செம்பருத்தி பூ – 10
 • வேப்பிலை – 30 கிராம்
 • துளசி – 30 கிராம்
 • வெட்டிவேர் – 10 கிராம்
 • பூலாங்கிழங்கு – 10 கிராம்
 • ஆவாரம்பூ – 50 கிராம்
 • ரோஜா – 50 கிராம்

செய்முறை 

இந்த பொருள்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடையில் காய வைத்தே கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் வாங்கி மிக்சியில் அரைத்து நைஸ் பொடியாக மாற்றுங்கள். அல்லது ஒவ்வொரு பொருளையும் நீங்களே வாங்கி வெயிலில் உலர்த்தி அதன் பின் பொடித்து எடுத்துக் கொள்ளலாம். ஆண் குழந்தைகள் என்றால் கஸ்தூரி மஞ்சளின் அளவை பாதியாகக் குறைக்கலாம். அல்லது பயன்படுத்தாமலேயே இருக்கலாம்.

குளியல் பொடி 2

தேவையான பொருள்கள்

 • உலர்ந்த ஆரஞ்சு தோல் – 3-4 பழத்தின் தோல்கள்
 • பாதாம் – 10
 • எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்
 • செம்பருத்தி பூ – 10
 • ரோஜா இதழ் – 150 கிராம்
 • பச்சைப்பயறு – 200 கிராம்
 • கடலப்பருப்பு – 100 கிராம்
 • கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
 • வேப்பிலை – 50 கிராம்

செய்முறை

கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை நன்றாக உலர வைக்க வேண்டும். கடையில் அல்லது மிக்சியில் நன்றாக பொடி செய்து கொள்ளவும். இப்போது குளியல் பொடி தயார்.

குறிப்பு : இரண்டு பொடிகளை அரைத்த பின்பும் நன்கு சலித்து அதன் பின்னர் வரும் மிருதுவான பொடியை பயன்படுத்த வேண்டும்.

இதனை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

Who can use this

Image: Shutterstock

 • குழந்தைகள்,
 • பெண்கள்
 • மற்றும் சிறுவர் சிறுமிகள்

என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆண் குழந்தைகள் எனில் கஸ்தூரி மஞ்சளை  தவிர்க்கலாம்.

இயற்கை குளியல் பொடியின் பலன்கள் என்னென்ன ?

 • பச்சிளம் குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்றது
 • சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன
 • பக்கவிளைவுகள் அற்றது
 • ரசாயன சேர்க்கை எதுவும் இல்லை
 • சருமத்தின் இயற்கை எண்ணெய்பசை பாதுகாக்கப்படுகிறது
 • சரும துர்நாற்றம் நீங்கும்
 • உடலை குளுமையாக வைத்திருக்கும்
 • சருமத்தின் கருந்திட்டுக்கள் நீங்கும்
 • வியர்க்குரு போன்ற வெயில் கால சரும சிக்கல்கள் வராது
 • பெண் குழந்தைகள் அல்லது பெண்களுக்கு சருமத்தில் முடி வளராமல் இருக்கும்
 • மினுமினுப்பான சருமம் கிடைக்கும்
 • பிரகாசமான சருமமும் ஒளிரும் முகமும் உங்கள் குழந்தைக்கு என்றும் சொந்தமாகும்

எப்படி பயன்படுத்துவது

 • மிஷினில் கொடுத்து அரைத்து கொண்டு வந்த உடன் ஒரு லேசான துணியில் இதனை வடிகட்ட வேண்டும்
 • கடலை மாவு மற்றும் பச்சைப்பயிறு மாவைத் தனி தனியாக அரைப்பதும் சேமிப்பதும் சிறந்தது. காரணம் சீக்கிரம் இவை பூச்சி  பிடிக்கலாம்.
 • மற்ற எல்லா பொருள்களும் ஆறு மாதங்கள் வரை கெடுவதில்லை
 • கொடுக்கப்பட்ட பொருள்களை பாலுடன் கலந்து குளிக்கும்போது குழந்தையின் உடலில் மென்மையாக தேய்க்கவும்.
 • இதைப் போலவே கூந்தலுக்கும் இந்தப் பொடியை பயன்படுத்த முடியும். கஸ்தூரி மஞ்சள் இல்லாத போது கூந்தலுக்கான பலன்கள் அதிகமாக இருக்கும்.
 • மேலும் பூந்திக்கொட்டை , பச்சரிசி, வெந்தயம் போன்றவற்றை சேர்ப்பதால் சிறந்த கூந்தல் பலன்களை நீங்கள் பெற முடியும். பெண் குழந்தையின் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
 • குழந்தைக்கு மூன்று மாதங்கள் ஆன பின்பு இந்தக் குளியல் பொடியை பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் சந்தனம் , வெட்டிவேர் , பன்னீர் போன்றவைகளை சிறிது சேர்க்கலாம்.
 • இந்தப் பொடியை பயன்படுத்தும்போது அதிக அழுத்தம் கொடுத்து தேய்க்காமல் மென்மையாக தேய்த்தால் போதுமானது.
 • கொடுக்கப்பட்ட இரண்டாவது குளியல் பொடியானது சரும நோய்கள் எதையும் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.
 • இது தவிர குழந்தையின் நிறம் மேம்படும் மாயம் நடக்கிறது
 • குழந்தையின் நிறம் அதிகரிப்பதோடு கூடுதல் அழகுடன் குழந்தை ஜொலிக்கவும் செய்யும்
 • எந்தப் பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் பட்டுக்குட்டிக்கான மென்மை சருமம் நிரந்தரமாகிறது

மேற்கூறிய முறையில் உங்கள் உயிருக்கும் மேலான குழந்தைகளை பத்திரமாக குளிக்க வையுங்கள். ஒரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அது பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். எந்த மூலப்பொருளையும் நீங்கள் உங்கள் கைப்பட கழுவி காயவைத்து தயாரிப்பது மிகவும் நல்லது. அற்புதமான பெற்றோராகிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

The following two tabs change content below.